திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு, திமுகவின் 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்து திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் கடந்த 28-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ஆம் தேதி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனவும், அதில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.