டிரெண்டிங்

குரங்குகளை போல நம்மிலும் சிலர்: அமைச்சர் காமெடி

குரங்குகளை போல நம்மிலும் சிலர்: அமைச்சர் காமெடி

webteam

குரங்குகளைப் போன்றே நம்மிலும் சில அடங்காத நபர்கள் உள்ளனர் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடிக்கையாக தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மேலூர் தொகுதி உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட அழகர்கோவில் மலைப் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளி்த்த அமைச்சர் சீனிவாசன், விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் அழகர்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், குரங்குகள் உணவுக்காக அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகக் கூறினார். குறிப்பாக, ஆல்பா என்ற வகை குரங்குகள் சற்று வலிமையானவை என்றும் அவற்றைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வேடசந்தூர் பகுதியில் உள்ள கூவாக்கப்பட்டி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குரங்குகள் தொல்லை கொடுப்பதாகக் கூறினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சீனிவாசன், குரங்குகள் மட்டுமல்ல, நம்மிலும் சிலர் அடங்காதவர்கள் உள்ளனர் என்று வேடிக்கையாக பதிலளித்தார். அப்போது அவையில் சிறிது நேரம் சிரிப்பொலி் எழுந்தது.