டிரெண்டிங்

தினகரன் போட்டியிடவில்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்கும்: புகழேந்தி

தினகரன் போட்டியிடவில்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்கும்: புகழேந்தி

rajakannan

ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடவில்லை என்றால் திமுக வெற்றி பெற்றிருக்கும் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். 

ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி ஆகிய 5 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் மாவட்ட செயலாளர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டனர். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, டிடிவி தினகரன் போட்டியிடவில்லை என்றால் திமுக உறுதியாக வெற்றி பெற்றிருக்கும், திமுக வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்வதில் எனக்கு தயக்கமே இல்லை என்று கூறினார்.  மேலும் அவர் கூறுகையில், இவர்களை நம்பி அங்கேயே இருக்க முடியுமா இல்லையா என்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பிகள், அமைச்சர்கள் மற்ற எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர் என்றார். 

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசாவிற்கு விடுவிக்கப்பட்ட தீர்ப்பை வரவேற்றதால் தினகரனுக்கும், திமுகவுக்கும் கூட்டு உள்ளது என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் விமர்சித்து இருந்தனர். அதேபோல், திமுகவுடன் தினகரன் கூட்டு வைத்து ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் குற்றம்சாட்டினர். 

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த புகழேந்தி, மனிதாபிமான அடிப்படையிலேயே தீர்ப்பை தினகரன் வரவேற்றதாக புகழேந்தி கூறினார். மேலும், ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கைகுலுக்கிக் கொண்ட படங்களை வெளியிட்டார். அதேபோல், ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வணக்கம் தெரிவித்த படத்தையும் வெளியிட்டு விமர்சித்துள்ளார்.