18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் தரப்பு அணியினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தகுதி நீக்கம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ., “தகுதி நீக்கம் செல்லாது. தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம். நாங்கள் கட்சிக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அரசு கொறடாவின் உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்” என்றார்.
இத்தகைய நிலையில், சபாநாயகர் தனபாலின் நடவடிக்கைக்கு எதிராக தினகரன் அணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு செப்டம்பர் 20-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தொடக்கத்திலே உத்தரவுக்கு தடை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை நீக்கிய சபாநாயகரின் உத்தரவு குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்க 3 மாதங்கள் ஆகும் என்றும் வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.