டிரெண்டிங்

விருத்தாசலத்தை பிரேமலதா தேர்ந்தெடுத்தது ஏன்? - ஓர் அலசல்

விருத்தாசலத்தை பிரேமலதா தேர்ந்தெடுத்தது ஏன்? - ஓர் அலசல்

EllusamyKarthik

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி, விஜயகாந்த் முதல்முறையாக வெற்றி பெற்ற தொகுதி. அங்குதான் இந்த தேர்தலில் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு கிடைத்த வாக்குகள் பிரேமலதாவுக்கு கிடைக்குமா?

கட்சித்தொடங்கி முதல்முறையாக 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் நடிகர் விஜயகாந்த். அப்போது களத்தில் 14 வேட்பாளர்கள் இருந்தனர். அதிலும் விஜயகாந்த் என்ற பெயரிலேயே 3 பேர் போட்டியிட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்று அந்த கட்சியினரால் நம்பப்படும் தொகுதியும் கூட. அத்தனை சவால்களையும் முறியடித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் 61 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக, அதிமுக அடுத்தடுத்த இடங்களை பெற்றன. இளைஞர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி என விஜயகாந்த்தின் திட்டங்கள் தொகுதி மக்களிடையே செல்வாக்கு பெற்றுத் தந்தது.

2011 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக சார்பில், முத்துகுமார் களமிறக்கப்பட்டார். அத்தேர்தலில், முத்துகுமாரும், 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், 2016 தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. தேமுதிக 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

விஜயகாந்த் என்ற மேஜிக் வார்த்தை, விருத்தாசலத்தில் மீண்டும் மக்களை ஈர்க்கும் என்ற நம்பிக்கையில், அங்கு பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கார்த்திகேயன், நாம் தமிழர் அமுதா, மக்கள் நீதிமய்யம் சார்பில் ஐஜேகே வேட்பாளர் மகாவீர் சந்த், அமமுக கூட்டணியில் தேமுதிக பிரேமலதா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தொகுதிக்கு தொடர்பில்லாதவர் என்கிற சொந்த கட்சியினரின் எதிர்ப்பே ராதாகிருஷ்ணனுக்கு சவாலாக மாறியிருக்கிறது. ஆனாலும் கூட்டணியில் உள்ள திமுக மற்றும் விசிக வாக்குகள் கைகொடுக்கும் என நம்புகிறது காங்கிரஸ் கட்சி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் கார்த்திகேயனுக்கும் தொகுதியில் பெரிய அறிமுகம் இல்லை. அதிமுகவின் வாக்குவங்கியை கூடுதல் பலமாக நம்பியே களமிறங்குகிறார் பாமக வேட்பாளர்.

விருத்தாசலம், வேப்பூர் வட்டங்களை உள்ளடக்கிய விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் 4 முறையும், அதிமுக, திமுக தலா 2 முறைகளும்,பாமக, ஜனதாதளம், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் சுயேச்சை தலா ஒருமுறையும் தேமுதிக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று முதல் 2 தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக, அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி மாறி மாறி போட்டியிட்டது, சரிந்துவரும் வாக்குவீதம், விஜயகாந்த் நேரடி பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை என பல சவால்கள் பிரேமலதாவுக்கு விருத்தாசலம் களத்தில் காத்திருக்கின்றன.