டிரெண்டிங்

அண்டை மாநிலங்களைவிட பேருந்து கட்டணம் குறைவுதான்: ஓ.பன்னீர்செல்வம்

அண்டை மாநிலங்களைவிட பேருந்து கட்டணம் குறைவுதான்: ஓ.பன்னீர்செல்வம்

rajakannan

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த ஒருவாரத்திற்குள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. 

இந்த நிலையில், அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் சாதாரணப் பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 60 பைசாவாக இருக்கும் கட்டணம் ஆந்திராவில் 63 பைசாவாகவும் கேரளாவில் 64 பைசாவாகவும் கர்நாடகத்தில் 59 பைசாவாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

விரைவு பேருந்துகளில் கிலோமீட்டருக்கு தமிழகத்தில் கிலோமீட்டருக்கு 80 பைசாவாக இருக்கும் கட்டணம் ஆந்திராவில் 87 பைசாவாகவும் கேரளாவில் 72 பைசாவாகவும் கர்நாடகாவில் 90 பைசாவாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி சொகுசு பேருந்துகளில் தமிழகத்தில் கிலோமீட்டருக்கு 90 பைசாவாகும் ஆந்திராவில் 98 பைசாவாகவும் கேரளாவில் 90 பைசாவாகவும் கர்நாடகாவில் 1ரூபாய் 12 பைசாவாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

        
 
அதிநவீன சொகுசு பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 1 ரூபாய் 10 பைசாவாக தமிழகத்தில் கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திராவில் 1 ரூபாய் 16 பைசாவாகும் கேரளாவில் 90 பைசாவாகும் கர்நாடகாவில் ஒரு ரூபாய் 31 பைசாவாகவும் உள்ளது. குளிர்சாதன பேருந்துகளில் தமிழகத்தில் கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் 40 பைசாவாக உள்ளது. ஆந்திராவில் 1 ரூபாய் 46 பைசாவாகவும் கேரளாவில் 1 ரூபாய் 10 பைசாவாகவும் கர்நாடகாவில் 1 ரூபாய் 77 பைசாவாகவும் கட்டணம் உள்ளது. 

வால்வோ பேருந்துகளுக்கு தமிழகத்தில் கிலோ மீட்டருக்கு 1 ரூபாய் 70 பைசாவாக இருக்கும் நிலையில் ஆந்திராவில் ஒரு ரூபாய் 82 பைசாவாகவும் கேரளாவில் 1 ரூபாய் 30 பைசாவாகவும் கர்நாடகாவில் ஒரு ரூபாய் 90 பைசாவாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.