விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காமல், டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கியிருப்பதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கும், சிலைகள் அமைத்து வழிபடுவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே, சென்னையில் 5 மாதங்களுக்குப் பின் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்காமல், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சி மற்றும் அனுமன் சேனா அமைப்பினர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் செந்தில், தமிழகத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைத்து வழிபட அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.