டிரெண்டிங்

அதிமுக வேட்பாளர் விண்ணப்பத்தில் கையெழுத்து: ஓபிஎஸ்- ஈபிஎஸ் பதிலளிக்க கெடு

அதிமுக வேட்பாளர் விண்ணப்பத்தில் கையெழுத்து: ஓபிஎஸ்- ஈபிஎஸ் பதிலளிக்க கெடு

webteam

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இட, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இருவரும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை தெரிவித்திருந்தது. அதன்படி அமைச்சர்களின் வாரிசுகள் உட்பட 1,700 மேற்பட்டோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். 

அந்த மனுவில் அதிமுக கட்சியின் விதிகள் படி, அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 4 வாரத்தில் பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையும் மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.