தனித்துப் போட்டி என அறிவித்துள்ள நிலையில், பாஜக சென்னை உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதேநாள் இரவில் வேட்பாளர்கள் பட்டியலை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது.
தமிழக பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர், நெல்லியாளம், உதகை ஆகிய நகராட்சிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, நாமக்கல் நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சிக்கும், பாலகோடு உள்ளிட்ட 4 பேரூராட்சிகளுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட 4 நகராட்சிகளுக்கும், அலங்காயம், உதயேந்திரம், நாட்றாம்பள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் பெயரை பாஜக அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் மூன்று வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்கும் வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டார். சென்னை. கோவை, ஓசூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 112 வார்டுகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: வாஜ்பாய்-1998 முதல் மோடி-2022 வரை : அதிமுக, பாஜக கூட்டணி கடந்து வந்த பாதை