நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முக்கிய அரசியல் கட்சிகள் பங்குபெறும் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.
ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் டெல்லியில் அரசியல் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தை மத்திய சட்ட ஆணையம் நடத்த உள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகள் மற்றும் 59 மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து செயலாக்க அறிக்கை ஒன்றை சட்ட ஆணையம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 2019 மக்களவை தேர்தலின் போது ஒரு பகுதி மாநிலங்களுக்கும் 2024 மக்களவை தேர்தலின் போது மற்ற மாநிலங்களுக்கும் சட்டப் பேரவை தேர்தல் நடத்தலாம் எனக் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.