திப்பு சுல்தான் ஜெயந்தி இனி அரசு விழாவாக கொண்டாடப்படாது என்று முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்நாடக அரசரான திப்பு சுல்தானின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. திப்பு ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாட பாஜக தரப்பில் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்று நான்கு நாட்களே ஆன நிலையில், திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்துள்ளது. ‘சர்ச்சைக்குரிய, வகுப்புவாத திப்பு ஜெயந்தி விழாவை தங்களுடைய அரசு ரத்து செய்துள்ளது’ என பாஜக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “திப்பு சுல்தான் பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக போராடினார். என்னைப் பொறுத்தவரையில், அவர்தான் நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர். அதனால், திப்பு ஜெயந்தியை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், பாஜகவை பொறுத்தவரை திப்பு ஒரு சிறுபான்மையின மனிதர். பாஜகவினர் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளனர். அவர்கள் மதச்சார்பின்மையை ஏற்கவில்லை. இதனை நான் நூறு சதவீதம் எதிர்கிறேன்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.