செய்தியாளர் : வெற்றிச்செல்வி
கறாரான சட்டங்களும், காரசார விவாதங்களும் நடக்கும் நாடாளுமன்றத்தில், ஒரு குட்டிப் பெண் செய்த க்யூட் குறும்பு ஒட்டுமொத்த அவையையும் ரசிக்க வைத்துள்ளது. ஆறு மாதக் குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு செனட்டர் ஒருவர் உரையாற்றிய அந்த அழகான தருணம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கூட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர், பாத்திமா பேமன் (Fatima Payman) உரையாற்றிக் கொண்டிருந்தார். தனது ஆறு மாதக் குட்டி மகள் அலியாவை தோளில் அணைத்தபடியே அவைக்கு வந்து அவர் உரை நிகழ்த்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அம்மா ஒரு பக்கம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்க, தோளில் அமர்ந்திருந்த குட்டி அலியா தன் பங்குக்குச் சின்னச் சின்னக் குறும்புகளைச் செய்யத் தொடங்கினாள். இதைப் பார்த்த பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு செனட்டரான லிடியா தொர்ப் (Lidia Thorpe), அந்தக் குட்டிப் பெண்ணைச் சிரிக்க வைக்க விதவிதமான முகபாவனைகளைக் காட்டி 'Peek-a-boo' விளையாடத் தொடங்கினார்.
தாய் தன் உரையைத் தொடர, பின்னால் சக செனட்டர் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய இந்தக் காட்சி, அங்கிருந்த மற்ற உறுப்பினர்களின் முகத்திலும் புன்னகையைப் பூக்க வைத்தது. தீவிரமான அவை நடவடிக்கைகளுக்கு நடுவே நடந்த இந்த இனிமையான தருணம், இப்போது சோஷியல் மீடியாவில் பலரையும் கவர்ந்து வருகிறது.
சுவாரஸ்யமாக, அன்றைய தினம்தான் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் Digital Duty of Care Bill என்ற முக்கிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இணையத்தில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், குறிப்பாகக் குழந்தைகளை ஆன்லைன் பாதிப்புகளிலிருந்து காப்பதும் இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைகளை அழைத்து வருவதற்கும், அவைக்குள் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் அனுமதி அளிக்கும் வகையில் விதிமுறைகள் உள்ளன. 2017-ஆம் ஆண்டில் செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் (Larissa Waters) நாடாளுமன்றக் கூட்டத்தின்போதே தனது குழந்தைக்குப் பாலூட்டி, அந்த வரலாற்றைப் படைத்த முதல் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.