கடலூரில் இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் புறக்கணித்தனர்.
கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கடலூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச்செல்வன், எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.
இந்தப் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு, இன்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக, இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான மாரத்தான் போட்டி, மேடை அமைக்கும் பணிகளைப் பார்வையிட கடலூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத் பங்கேற்றதால் இன்றைய நிகழ்ச்சியையும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்தனர். தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அமைச்சர் சம்பத் தடையாக இருப்பதாக பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.