தொடர் வெற்றிகளால் நடப்பு சீசனில் ஆதிக்கம் மிக்க அணிகளில் ஒன்றாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
இந்த சீசனில் களமிறங்கிய முதல் போட்டியில் தோல்வி அடைந்து கடந்த ஆண்டை போலவே மோசமான ஃபார்மை தொடர்வதாக பல்வேறு விமர்சனங்களுக்குள்ளான சிஎஸ்கே, அடுத்தடுத்த 4 வெற்றிகள் மூலம் விமர்சனங்களை விளாசியடித்தது. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சரி சம பலத்துடன் வலம் வருகிறது தோனியின் படை. பேட்டிங்கில் இளம் வீரர் ருத்துராஜ் மற்றும் அனுபவ வீரர் டூபிளசி இருவரும் வலுவான தொடக்கத்தை அணிக்கு ஏற்படுத்தி கொடுப்பது அணிக்கு பெரும் பலமாக உள்ளது.
ரெய்னா, ராயுடு, தோனி என அணியின் முன் வரிசை பேட்டிங் அனுபவ நட்சத்திரங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. மத்திய வரிசை பேட்டிங்கைப் பொறுத்தவரை அதிரடி அஸ்திரமாக வலு சேர்க்கிறார்கள். சாம் கரண், பிராவோ, சர்தூல் தாகூர் ஆகியோரும் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம். ஃபார்மில் இருந்த மொயில் அலி முந்தைய போட்டியில் களமிறங்காத நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவது கேள்விக்குறியாக உள்ளது.
பந்து வீச்சைப் பொறுத்தவரையில் தீபக் சாஹர் நிலையான ஃபார்மை வெளிப்படுத்த தவறுவது பின்னடைவே. சாம்கரண் முக்கிய தருணங்களில் விக்கெட்டைச் சரிக்க பக்கபலமாக உள்ளார். சர்தூல் தாக்கூர் பெங்களூருக்கு எதிரான போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது நல்ல செய்தி. சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, தாஹிர் அசுரபலமாக உள்ளனர்.
ராயுடு கடந்த போட்டியில் காயமடைந்த நிலையில் அவருக்கு மாற்றாக கிருஷ்ணப்பா கவுதம் அல்லது ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப இங்கிடி அல்லது தாஹிர் களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது