ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே இரண்டு தொடர் வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தாவை வென்றால் ஹாட்ரிக் வெற்றிப் பெற்று சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
கொல்கத்தா அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் மட்டும் வென்ற நிலையில், தற்போது 3-ஆவது தோல்வியை தடுக்கும் திட்டத்துடன் சென்னையை எதிா்கொள்கிறது. கடந்த இரு ஆட்டங்களிலும் முதலில் கொல்கத்தாவின் கை ஓங்கியிருந்தாலும், பின்னா் ஆட்டம் அந்த அணியின் கையை விட்டுச் சென்றது அணியின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியானது.
சிஎஸ்கேவை பொறுத்தவரை அணியில் எவ்வித மாற்றமும் ஏற்பாடு என்றே தோன்றுகிறது. தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. ஆனாலும் இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றே தோன்றுகிறது. அதேபோல பவுலிங்கிலும் எவ்வித மாற்றத்தையும் சிஎஸ்கே மேற்கொள்ளாது என்றே தெரிகிறது.
கொல்கத்தாவை பொறுத்தவரை சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், மார்கன்ஆகியோர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். மேலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆல் ரவுண்டர்களான ஆண்ட்ரே ரசல் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். பவுலிங்கை பொறுத்தவரை பாட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரை பெரிதும் நம்பியிருக்கிறது. இவையெல்லாம் கைகொடுத்தால் இன்று கொல்கத்தாவுக்கு வெற்றி வசமாகும்.