டிரெண்டிங்

"இனி வெற்றிப்பெறுவதை தவிர வேறு வழியில்லை" - டெல்லியுடன் மோதும் சிஎஸ்கே.!

"இனி வெற்றிப்பெறுவதை தவிர வேறு வழியில்லை" - டெல்லியுடன் மோதும் சிஎஸ்கே.!

jagadeesh

வெற்றிகளை தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ள சென்னை மற்றும் சீசனில் முதல் பாதியில் கொடிகட்டிப் பறந்த டெல்லி அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

சீசனின் முதல் பாதியை மோசமாக கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டாம் பாதியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பேட்டிங்கில் வாட்சன், ராயுடு சராசரியான ஃபார்மில் உள்ளனர். டூபிளசி கடந்த இரு போட்டிகளில் சறுக்கியுள்ள போதிலும், புதிய வியூகமாக சாம் கரண் ஓபனிங்கில் களமிறக்கப்பட்டுள்ளது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

மத்திய வரிசையில் கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா பக்கபலம். மேலும் பேட்ஸ்மேன் கட்டாயம் தேவை என்ற சூழலிலேயே, சென்னை அணி வாழ்வா சாவா போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது. பந்து வீச்சில் தீபக் சாஹர் கடந்த் சில போட்டிகளாக விக்கெட்டுகளை வீழ்த்த தவறியது பின்னடைவே. விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி வழங்கி வேதனையில் ஆழ்த்துகிறார் சர்தூல் தாகூர். சுழற்பந்து வீச்சாளர்கள் கரண் சர்மா, ஜடேஜா ஆகியோர் பந்து வீச்சிற்கு பக்கபலம்.

அருமையான பேட்டிங் மேல்வரிசை, அதிவேகப் பந்துவீச்சாளர்கள் என சரிசம பலத்துடன் எதிரணியினருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது டெல்லி அணி. பிரித்திவி ஷா ஃபார்மை இழந்துள்ள போதிலும், தவன் அருமையான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நல்ல செய்தி. ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த்தின் காயம் அணிக்கு சோகம்.

மத்திய வரிசையில் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, அக்ஸர் படேல் ஆகியோர் ஆறுதல் அளிக்கின்றனர். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகப்பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார் நாட்ஜ். அவரது பவுலிங் ஜோடியான ரபாடவின் யார்க்கர்கள் எதிரணியினருக்கு கூடுதல் நெருக்கடி. இவர்களுடன் இணைந்து சுழற்பந்து வீச்சின் மூலம் அணிக்கு கூடுதல் வலுசேர்க்க அஸ்வினும், அக்ஸர் படேலும் உள்ளனர். ஐந்தாவது பந்து வீச்சாளராக வலம் வரும் தேஷ் பாண்டேவும் ஆறுதலான பங்களிப்பை வழங்கத் தொடங்கியிருக்கிறார்.

வியூகங்கள் வகுத்து வெற்றிகளை வசமாக்கும் கேப்டன் தோனியின் சென்னை படை, அசுர வளர்ச்சி கண்டுள்ள டெல்லி அணியை வீழ்த்தி வாகை சூடுமா என்பதே இன்றைய பாக்ஸ் ஆஃபீஸ் பலப்பரீட்சை.