ஒரு தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவை விவிபேட் மூலம் சரிப்பார்க்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வாக்கு ஒப்புகை சீட்டு முறை (விவிபேட்) மூலம் வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்கு குறித்து தெரிந்துகொள்ளலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் பயன்படுத்தப்பட்டவுள்ளது. தேர்தல் ஆணைய விதிப்படி தற்போது வாக்கு ஒப்புகை சீட்டு மூலம் பதிவான வாக்குகள் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியிலுள்ள ஏதாவது ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் சரிபார்க்கப்படும். இவ்வாறு ஒரு வாக்குசாவடியில் மட்டும் வாக்கு ஒப்புகை சீட்டை சரி பார்ப்பது குறித்து அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துவந்தனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வழக்கில் கட்சிகள் 50% தொகுதிகளில் வாக்கு ஒப்புகை சீட்டு முறை மூலம் வாக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் 50% தொகுதிகளில் வாக்குகளை சரிபார்த்தால் தேர்தல் முடிவு அறிவிக்க 6 நாட்கள் தாமதம் ஆகும் எனக் கூறியிருந்தது. இதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதலான ஊழியர்களை பணிக்கு அமர்த்தினால் இந்தத் தாமதத்தை தவிர்க்க முடியும் என அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று மறுபடியும் விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு ஆணைப் பிறப்பித்துள்ளது. இந்த ஆணையில், “தேர்தல் ஆணையம் தற்போது உள்ள நடைமுறையை மாற்றி ஒரு தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முடிவை விவிபேட் மூலம் சரிப்பார்க்கவேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், “உச்சநீதிமன்றத்தின் ஆணைய அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.