இந்தியாவில் எம்பிக்கள் எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் எண்ணிக்கையில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 324 வழக்குகள் எம்.பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. மொத்தம் 178 பேர் மீது 402 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டதாகவும் இவற்றில் 78 வழக்குகள் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3045 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தமிழகத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மொத்த எண்ணிக்கையில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிகமாக உத்தரபிரதேசத்தில் 539 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டாவதாக கேரளாவில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மீது 373 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மகராஷ்டிரா, கோவா நீங்கலாக எல்லா உயர்நீதிமன்றங்களும் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் மொத்தம் 1,765 பேர் மீது 3,816 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 771 வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.