டிரெண்டிங்

காதலர் தினத்தை 'பசு அணைப்பு தினமாக' கொண்டாட அழைப்பு - மீம்ஸ்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

JustinDurai

காதலர் தினத்தை 'பசு அணைப்பு தினமாக' கொண்டாட வேண்டும் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பை அடுத்து நெட்டிசன்கள் இணையத்தை மீம்ஸ்களால் நிரப்பி வருகின்றனர்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தின கொண்டாட்டங்கள்  ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக இருக்கும். பெரு நகரங்களில் இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் இருக்கும். இடையிடையே அன்றைய தினத்தில் காதல் ஜோடிகள் பரிசு பொருட்கள் பரிமாறி கொள்வது, காதலை வெளிப்படுத்துவது என சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறும்.

இப்படி களைகட்டும் காதலர் தினத்திற்கு இந்தியாவில் ஆதரவு தெரிவிப்போரும் இருக்கின்றனர், எதிர்ப்பு காட்டுவோரும் இருக்கின்றனர். காதலர் தினம் கலாச்சார சீர்கேடு என்று எதிர்ப்பவர்களும், `காதல் புனிதமானது; அதை கொண்டாடுவது தவறில்லை’ என்று ஆதரிப்பவர்களும் கூறி வருகிறார்கள். இதனால் இந்தியாவில் காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளை மி(வி)ரட்டும் சம்பவங்களும்  நடைபெறுவது உண்டு.

இந்த நிலையில்தான் காதலர் தினத்தை ‘பசு அணைப்பு தினமாக' கொண்டாட வேண்டும் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் இன்றைய அழைப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுபற்றி இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, பசு அரவணைப்பு தினமாக அனைத்து பசுப் பிரியர்களும் கொண்டாடலாம். பசுக்களை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பந்தம் பெருகும். தனிநபர் மகிழ்ச்சியும், குடும்ப மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எனவே மேற்கத்திய கலாச்சாரத்தை ஒழித்து நமது பாரம்பரியத்தை காப்போம்” என கூறப்பட்டுள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ்களையும், பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். பலர் ட்விட்டரில் Cow Hug Day குறித்த பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்..