மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
மூன்றாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தடையை மீறி சுற்றுலா பயணிகள் யாரும் குறித்து விடாதவாறு போலீசார் அருவிப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உள்ளூர் மக்கள் அருவியை தூரத்தில் நின்று பார்த்து ரசித்து விட்டுச் செல்கின்றனர்.