டிரெண்டிங்

“இந்தமுறை கூட்டணி ஆட்சிதான் அமையும்” - சித்தராமையா

webteam

இந்தியாவில் இம்முறை கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கர்நாடகா மாநிலத்தில் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகா மாநிலத்தில் இத்தேர்தலை காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணியுடன் சந்திக்கிறது. 

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பிடிஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மட்டும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தனியாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பாண்மை இடங்களை பெறாது. எனினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும். நாட்டில் தற்போது மோடி அலை என்று ஒன்றும் இல்லை. அத்துடன் மக்கள் அனைவரும் மதவாத சக்திகளை ஒழிக்கும் எண்ணத்தில் உள்ளனர். இதனால் பாஜகவிற்கு இரண்டாவது முறை வாய்ப்பு கிடைக்காது.

கர்நாடகாவை பொருத்தவரை மொத்தம் உள்ள 28 தொகுதிகள் காங்கிரஸ் கட்சி 13 முதல் 14 இடங்களில் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது. அதேபோல ஜனதா தளம் 6 அல்லது 7 இடங்களிலும் வெற்றிப் பெறும். மொதத்தில் எங்கள் கூட்டணி 20 இடங்களுக்கு மேல் கைபற்றும். பாஜக வெறும் 8 முதல் 10 இடங்களை மற்றும் பிடிக்கும். அதேபோல தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தனியாக 150 க்கும் குறைவான இடங்களையை பிடிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.