ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்தது குறித்து மருத்துவர் சுதா சேஷையன் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ள நிலையில், ஜெயலலிதா இறந்த நேரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆணையத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுதா சேஷையன், ஜெயலலிதா இறந்து விட்டதாக தனக்கு டிசம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அப்போலோ மருத்துவமனை டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவர் இரவு 11.30 மணிக்கு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11.30 மணிக்கு ஜெயலலிதாவின் உயிர் பிரிந்திருந்தால், ஒரு மணி நேரம் முன்னதாக எம்பாமிங் செய்வதற்கு மருத்துவருக்கு எப்படி தகவல் தரப்பட்டது என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இதனால் ஜெயலலிதா இறந்த நேரம் குறித்து பொதுமக்களிடம் மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது.