டிரெண்டிங்

சர்ச்சை பேச்சு: கமல் மீதான வழக்கை ரத்து செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை மறுப்பு

Veeramani

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் தான் எந்த கருத்தையும் பேசவில்லை எனவும், எனவே தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு கரூர் நீதித்துறை நடுவர் முன்பாக நிலுவையில் இருப்பதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய இயலாது எனக் கூறி, கமல்ஹாசன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.