டிரெண்டிங்

பிரதமரானார் ராஜபக்சே - இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடியா?

பிரதமரானார் ராஜபக்சே - இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடியா?

webteam

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் சுதந்திரா கட்சிக்கு தனிமெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம்சிங்கே பிரதமர் ஆனார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. 

விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தது, அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியினருக்கு ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை. எதிர் எதிராக போட்டியிட்ட இந்த கட்சிகளின் கூட்டணி எதிர்பார்க்காத வகையில் அமைந்தது என்பது அப்போதே பலராலும் பேசப்பட்டது. 

இரண்டு கட்சிகளுக்கு இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. விக்கிரமசிங்கே கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அவரது கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சிறிசேன கட்சியின் அமைச்சர்கள் சிலர் கூட்டணியில் இருந்து கடந்த ஏப்ரலில் பதவி விலகினர். இலங்கை நாடாளுமன்றத்தில் விக்ரசிங்கேவிற்கு எதிராக நம்பிக்கயில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூட்டணியில் இருந்த இதர கட்சிகளின் உதவியுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தார். இதற்கிடையில், அதிபர் சிறிசேனாவை ராஜபக்சே நேரில் சந்தித்து பேசினார். அப்போது அரசியல் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.

சமீப காலமாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு முற்றியது. இலங்கை அதிபர் சிறிசேனா விக்கிரமசிங்கேவுக்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார். அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது. ரணில் விக்கிரமசிங்கே அரசு கலைக்கப்பட்டு விட்டது, ராஜபக்சேதான் பிரதமர் என்று இலங்கை அதிபர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கே தான் இலங்கையின் பிரதமர் என்று கேபினட் அமைச்சர் ரஜிதா சேனரத்னே பிசிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் இந்த அரசியல் மாற்றங்களில் இந்திய அரசின் தலையீடு இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சமீபத்தில் தான் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதேபோல், இந்த ஆண்டில் மஹிந்த ராஜபக்சேவும் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். இருப்பினும், இந்தியாவின் தலையீடு இருக்கும் என நினைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். 

மஹிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ள, ரணில் விக்கிரமசிங்கே தமது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார்.