உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள ராகுல், சோனியாவின் அமேதி, ரபேலி தொகுதிகளில் போட்டியில்லை என்று அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்தினார். மாயாவதி சொல்லியதை அகிலேஷ் வழிமொழிந்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் லக்னோவில் கூடியது. கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதில் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என குலாம்நபி ஆசாத் அறிவித்தார். பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் தேர்தல் போர் நிலவிவரும் நிலையில் கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும், ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.
இதுகுறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில், “வருகின்ற மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். 2019 மக்களவை தேர்தலைப் போல் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும்” என்றார். 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. முந்தைய ஆளும் கட்சியாக சமாஜ்வாடி கட்சி 5 இடங்களை வென்றிருந்தது.