நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. இதனால அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் அவரது ராஜினாமா இப்போது வரை கட்சி காரியக் கமிட்டியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு மாநில தலைவர்களும் கூட தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து பேசியுள்ள மூத்த தலைவர் வீரப்ப மொய்லி “காங்கிரஸ் கட்சியில் களையெடுக்கும் நேரம் வந்து விட்டது ; மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. பல்வேறு தளங்களில் தேர்தல் வைத்து நல்ல தலைமைகள் நியமனம் செய்யப்பட வேண்டும்” என்றார்.
ராகுல் ராஜினாமா குறித்து கேட்டபோது “ ராகுல் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும். அவரது ராஜினாமா தேவையற்றது. மாநிலங்கள் அளவில் மிக மோசமான தோல்வி கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநில தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்” என்றும் கூறினார்.