டிரெண்டிங்

இந்துத்துவா பாதையில் திரிணாமூல்: காங்., இடதுசாரிகள் குற்றச்சாட்டு

rajakannan

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவா போக்கை அணுசரிக்கிறது என்று காங்கிரஸ், இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ், கடந்த வாரம் பிர்பும் மாவட்டத்தில் ‘பிராமணர் மாநாடு’ ஒன்றினை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆச்சார்யார்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பகவத்கீதை வழங்கப்பட்டது. 

இந்து மதத்தைச் சேர்த்த மக்களின் வாக்குகளை கைப்பற்றவே திரிணாமூல் மிதமான இந்துத்துவ போக்கைக் கையாள்வதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் குற்றசாட்டியுள்ளனர். பாஜகவும், திரிணாமுல் கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வகுப்புவாதத்தை கடைபிடிப்பதாக சாடியுள்ளனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சுஜன் சக்ரபர்தி, “பாஜக பெரும்பான்மை அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வேளையில், திரிணாமூல் சிறுபான்மை அடிப்படைவாதத்தை ஊட்டுகிறது. இந்துத்துவா கொள்கைகளை கடைபிடிப்பதில் பாஜகவை திரிணாமுல் முந்திச் செல்ல பார்க்கிறது” என்றுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “பாஜக பிரச்சாரம் செய்வது இந்துமதம் அல்ல. அவர்கள் சமுதாயத்தை பிரிக்க விரும்புகிறார்கள். நாங்கள் அனைத்து சமுதாயங்கள், மதங்களை சேர்ந்த மக்களை அரவணைத்து முன்னோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறோம்” என்றுள்ளார்.