டிரெண்டிங்

வெடிக்க காத்திருக்கும் கர்நாடக அரசியல் களம் - தப்பிப்பாரா குமாரசாமி?

வெடிக்க காத்திருக்கும் கர்நாடக அரசியல் களம் - தப்பிப்பாரா குமாரசாமி?

rajakannan

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டது முதல் குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்கும் வரை கர்நாடக அரசியலில் பரபரப்புக்கு குறைவில்லை. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கடந்த 23ஆம் தேதி பதவியேற்றார். அன்றே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஷ்வர் துணை முதலமைச்சராக பதவியேற்றார். குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றாலும், அமைச்சரவை விவகாரத்தில் மீண்டும் சிக்கல் தொடங்கியது. இரு கட்சிகளிடையே அமைச்சரவை அமைப்பதில் பெரும் இழுபறி நடந்தது. 

பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்த நிலையில், ஜூன் 6ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், குமாரசாமி அண்ணன் ரேவண்ணா ஆகியோர் அமைச்சர்களாகினர். சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகி உள்ளார். ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டுள்ளது. சித்தராமைய்யாவை தோற்கடித்த ஜி.டி. தேவே கவுடாவும் அமைச்சராகி உள்ளார்.  இருப்பினும், இன்னும் அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் 6 இடங்களும், மஜத சார்பில் ஒரு இடமும் காலியாக உள்ளது. 

இந்நிலையில், முதல்கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர் பதவி கிடைக்காததால் காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், தன்வீர் சேட், நாகராஜ், எச்.கே.பாட்டீல், பி.சி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, ரோஷன் பெய்க் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அதிருப்தியில் உள்ள முக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.பி. பாட்டீலை சமாதானம் செய்யும் முயற்சிகள் இன்று நடைபெற்றன. முதலமைச்சர் குமாரசாமி, பரமேஸ்வரா உள்ளிட்ட காங்கிரஸ்-மஜத தலைவர்கள் எம்.பி.பாட்டீலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். ஆனால், இந்தப் பேச்சு வார்த்தைக்கு பிறகும் அவர் சமாதானம் ஆகவில்லை. 

குமாரசாமியை சந்திந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.பாட்டீல், “நான் தனியாக இல்லை. எனக்கு ஆதரவாக 15-20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி என்னை தூக்கி எறிந்தாலும், நான் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிய மாட்டேன். காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்னையை கட்சிக்குள் பேசி தீர்த்துக் கொள்ளும்” என்று கூறினார். 

குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கர்நாடக அரசியலின் வெப்பநிலை அப்படியே தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் போர்க்கொடி எதுவரை செல்லும் என்று தெரியவில்லை. இருப்பினும், 5 வருடங்கள் இன்னும் முழுமையாக இருப்பதால் ஒவ்வொரு நிகழ்வும் கர்நாடக அரசியலில் முக்கியமானதே.