டிரெண்டிங்

“மனைவிகளிடம் கூட பேசவிடாமல் எம்.எல்.ஏக்களை காங். துன்புறுத்துகிறது” - எடியூரப்பா

“மனைவிகளிடம் கூட பேசவிடாமல் எம்.எல்.ஏக்களை காங். துன்புறுத்துகிறது” - எடியூரப்பா

rajakannan

காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏக்களின் செல்போன்களை பறிமுதல் செய்து மனரீதியாக அவர்களை துன்புறுத்துவதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். 

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றார். ஆளுநர் உத்தரவிபடி அடுத்த 15 நாட்களில் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும். பாஜகவிடம் 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர்களுக்கு மேலும் 8 எம்.எல்.ஏக்கள் தேவை. அவர்களுக்கான ஆதரவை நிச்சயம் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்களிடம் இருந்துதான் பாஜகவால் பெற முடியும். இதனால், தங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க இரு கட்சிகளும் ரிசாட்டில் தங்க வைத்துள்ளனர். 

இந்நிலையில், பதவியேற்ற பின்னர் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பா பேசுகையில், “சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். ஆனால், 15 நாட்கள் தேவையென்று நாங்கள் நினைக்கவில்லை. ரிசாட்டில் தங்க வைக்கப்பட்டு மனரீதியாக துன்புறுத்தப்பட்டு வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நிச்சயம் எங்களது அரசுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம், நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்போம். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது மனைவிகளுடன் கூட பேச அனுமதிக்கப்படுவதில்லை” என்றார்.