டிரெண்டிங்

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏன்?

சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு தாமதம் ஏன்?

webteam

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன. 

இந்நிலையில் திமுக தலைமையில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நள்ளிரவில் அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சிவகங்கையை தவிர்த்து மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.

சிவகங்கை தொகுதியை பொருத்தவரையில் முன்னதாகவே தேர்தல் பணிகளை, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடங்கியிருந்தார். ஆனால் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருக்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் மறுப்பதாக தகவல் வெளியாகியது. 

எனவே சிவகங்கை தொகுதியில், கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் அல்லது முன்னாள் எம்.பி, சுதர்சன நாச்சியப்பன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி இன்று இரவுக்குள் அல்லது நாளை அறிவிக்க வாய்ப்புள்ளது. 

அதிமுக கூட்டணி சார்பில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.