கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசின் அமைச்சரவைக்கான துறைகள் குறித்து இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 22 துறைகளும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 12 துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத் தேர்தலில் 78 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு பின்னர், ம.ஜ.க தலைவர் குமாரசாமி கடந்த மே 23-ம் தேதி அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரவையில் எந்தக் கட்சிக்கு என்னென்ன துறைகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. எந்தக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று குமாரசாமி, சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
அதன்படி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வசம் உளவுத்துறை, நிதி ஆகிய துறைகள் இருக்கும். பொதுப்பணி, மின்சாரம், கூட்டுறவு, சுற்றுலா, மருத்துவக் கல்வி தவிர்த்த கல்வி, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், தோட்டக்கலை, சிறுதொழில், போக்குவரத்து, சிறிய அளவிலான நீர்ப்பாசனம் ஆகிய 12 துறைகள் மதச்சார்பற்ற ஜனதா தளம் வசம் இருக்கும்.
காங்கிரஸ் கட்சியிடம் உள்துறை மற்றும் பெங்களூரு நகர வளர்ச்சி ஆகிய துறைகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்ப்பாசனம், சுகாதாரம், தொழில், வருவாய், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, வீட்டு வசதி, மருத்துவக் கல்வி, சமூக நலம், வனம் மற்றும் சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம், சுரங்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், உணவு, சிறுபான்மையினர் நலம், சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், இளைஞர் மற்றும் விளையாட்டு, போக்குவரத்து வளர்ச்சி ஆகிய 22 துறைகள் காங்கிரஸ் வசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம் ஜூன் 6ம் தேதி நடைபெறும் என்று முதலமைச்சர் குமாரசாமி கூறினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் எனக் கூறினார்.
இதனையடுத்து, இன்று மாலை குமாரசாமி மற்றும் பரமேஷ்வர் இருவரும், ஆளுநர் மாளிகையில் கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக தாங்கள் உருவாக்கியுள்ள பட்டியலை அளித்தனர். அதேநேரம், அமைச்சர்கள் பெயர் இன்னும் வெளியாகவில்லை. துறைகள் அடங்கிய பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.