மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட வேண்டும் என்று நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேற்கொண்டு புதிதாக மணல் குவாரிகள் திறக்கவும் நீதிபதி தடை விதித்தார். சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் விற்பனைக்கு துணை நிற்கும் அதிகாரிகள் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக சென்னை சிஐடி நகரில் புதிய தலைமுறையிடம் பேசிய நல்லகண்ணு, “தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. 3 அடிக்கு கீழ் மணல் தோண்டக்கூடாது என்ற விதியை யாரும் கடைப்பிடிப்பதில்லை. விதிகளை மீறி மணல் அள்ளியதால் பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. எனவே மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும். அத்துடன் மணலை இறக்குமதி செய்து முறையாக அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார்.