டிரெண்டிங்

மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... கேரள அரசியல் வரலாறு!

Veeramani

தமிழகத்துடன் இணைந்து கேரளாவிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தின் அரசியல் வரலாற்றை பார்க்கலாம்.

கேரள மாநிலம் நீண்ட நெடிய அரசியல் பராம்பரியம் உடையது. ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது, 1888 ஆம் ஆண்டு முதன்முதலாக கேரள மாநிலம் திருவாங்கூரை தலைமையிடமாகக் கொண்டு முதல் பேரவை அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது உள்ளூர் பேரவையாக அது இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, திருவாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, 140 தொகுதிகளுடன் கேரளா என்ற புதிய மாநிலம் உருவானது. 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பேரவைத் தேர்தலில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைத்தது.

இதுவரை 14 முறை கேரள சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சியமைத்து வருகின்றன. கடைசியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்றார். தற்போதைய தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பிரதானமாக களத்தில் உள்ளன.

இடதுசாரி ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக்தந்திரிக் ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்தியன் நேஷனல் லீக், கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரு பிரதான கூட்டணிகள் தவிர, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளது.

காங்கிரஸ், இடது சாரி கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி என்றும், எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது பாஜக. கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது இரட்டை இலக்கத்தில் பேரவைக்குள் நுழைய வேண்டும் என தீர்மானித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை வென்றது காங்கிரஸ் கூட்டணி. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டதும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. எனினும், அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.

சபரிமலையை பொருத்தவரையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தியதால், மக்களவைத் தேர்தலில் சரிவை சந்தித்தது இடதுசாரி கூட்டணி. இதன்தொடர்ச்சியாக சபரிமலை விவகாரத்தில் சற்று மென்மையான போக்கை கடைப்பிடித்த அரசு, சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்திய வழக்கு, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் என இடதுசாரிகள் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

கேரளாவைப் பொருத்தவரையில், 5 ஆண்டுகள் எவ்வளவுதான் நல்லாட்சி புரிந்திருந்தாலும், மீண்டும் அந்த கட்சிக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்பதில் மட்டும் கேரள மக்கள் தீர்மானமாக இருப்பது இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகளைக் கொண்டு நாம் அறியலாம். அதில் இம்முறை மாற்றமிருக்கும் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும், ஆளும் இடதுசாரி கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என கட்டியம் கூறுகின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்ற மக்களின் மனநிலை தொடருமா அல்லது திருப்பமாக, இடதுசாரி ஆட்சி தொடருமா என்பதை மே 2-ல் தெரிந்து கொள்ளலாம்.