டிரெண்டிங்

ஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவர் : குவியும் பாராட்டுக்கள்!

webteam

கோவை எட்டிமடையை சேர்ந்தவர் கோபாலன் என்பவரின் மகன் திரிஷாந்த். இவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே திரிஷாந்துக்கு கணினித் துறையில் ஆர்வம் இருந்ததால், 9ஆம் வகுப்பு படிக்கும்போது தெரிந்தவர் மூலம் தனியார் ஐடி நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக வேலை செய்தார். அதன்பின் திரிஷாந்த் தனியாக ஆன்ட்ராய்டு செயலியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தொடக்கத்தில் செல்போன்களில் பயன்படுத்தும் திசைக்காட்டி உள்ளிட்ட சின்ன, சின்ன செயலிகளை கண்டுபிடித்தார். அதனை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை பயன்படுத்தச்சொல்லி அதன்மூலம் கருத்துக்களைப் பெற்று மேம்படுத்தினார்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கும், பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு செயலியை தயாரித்தார். மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை அந்த செயலியில் பதிவிட்டால், விலை மற்றும் விற்பவர் இருக்கும் தொலைவை அந்த செயலி காட்டும். இந்த செயலிக்கு மக்கள் மத்தியில் சற்று வரவேற்பு கிடைத்தாலும், பொதுமுடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு செயலின் பயன்பாடு குறைந்தது.

இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளை, புகார்களையும் பதிவு செய்யவும் வகையில் மைக்ரோ பிளாக் புகார் செயலியை திரிஷாந்த் கண்டுபிடித்திருக்கிறார். இந்த செயலியை இயக்க தனியாக சர்வரை வாங்கி தற்காலிகமாக தனது கட்டுப்பாட்டில் அவர் இயக்கி வருகிறார். தற்போது இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கிடையே மாணவர் திரிஷாந்தை தங்கள் நிறுவனத்தின் வெப்சைட்டை டெலெவப் செய்து தருமாறு பல நிறுவனங்கள் அணுகி வருகின்றன. பொதுபோக்கு செயலியை தயாரிக்காமல் மக்களுக்கு பயன்படும் செயலியை தயாரித்து மாணவருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன.