நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வாரி வழங்கி வார்டு மக்களை அமமுக வேட்பாளர் கவர்ந்து வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் வகைவகையான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சி 44வது வார்டு வேட்பாளாராக களம் காணும் அமமுக வேட்பாளர் அமுதா மகாலிங்கம், வார்டு மக்களுக்கு பல கவர்ச்சிகரமான பல வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
அதில், இலவச காய்கறி திட்டம், இலவச டியூசன் சென்டர், வார்டுகளில் 24X7 ஆன்லைன் மற்றும் தொலைபேசியில் குறைதீர் மையம், 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை, என பல வாக்குறுதிகளை அறிவித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். இது வார்டு மக்களை உற்று நோக்க வைத்துள்ளது.
இவரது வாக்குறுதிகளை காப்பி அடித்து பிற வேட்பாளர்களும் வாக்குறுதிகள் அளிப்பதாக தெரிவிக்கும் வேட்பாளர் அமுதா, என் வார்டில் என்னென்ன இருக்க வேண்டும் என இந்த வார்டில் வசிக்கும் குடியிருப்புவாசியாக, பெண்ணாக நான் ஆசைபட்டேனோ அதைத்தான் அறிவித்திருக்கிறேன்.
எல்லா வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கும் வார்டாக இந்த வார்டு உள்ளது. எனவே பெண்கள் அச்சமின்றி நடமாட கண்காணிப்பு கேமரா மற்றும் தெருக்களில் பாதுகாவலர்கள் சேவை, இலவச காய்கறி திட்டத்தை வார்டு மக்களுக்கு நிறைவேற்றி சாதனை படைப்பேன்.
இதற்கான திட்டங்களை அமல்படுத்த வேண்டிய சாத்தியக்கூறுகள் எல்லாம் தயார் செய்திருக்கிறேன், அதனை இப்போது கூறினால் அதனையும் போட்டியாளர்கள் காப்பி அடித்து விடுவார்கள்" எனத் தெரிவித்தார்..