டிரெண்டிங்

கோவை: உணவு பாதுகாப்பு அதிகாரி என மோசடியில் ஈடுபட முயன்ற கும்பல்

kaleelrahman

கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலை அடையாளம் கண்ட வியாபாரி சுதாரித்து கொண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் சாலையை சேர்ந்த முத்துராமன், இவர், புலியகுளம் விநாயகர் கோவில் அருகே உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி, உணவகத்தில் பணியில் இருந்த போது, 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் காரில் கடைக்கு வந்துள்ளனர். தாங்கள், உணவு பாதுகாப்புத் துறையை சேர்ந்த அதிகாரிகள் எனக்கூறி, உணவகத்தில் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர்.


பின்னர், கடையில் சுகாதாரம் சரியில்லை, எண்ணெய் சரியில்லை எனக்கூறி கடையின் உரிமத்தை காட்டுமாறு கேட்டுள்ளார். ஆவணங்களை காட்டிய பிறகும், சுகாதாரம் இல்லை எனவும், நடவடிக்கை எடுக்காமலும், கடைக்கு சீல் வைக்காமலும் இருக்க ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த முத்துராமன், வியாபாரிகள் சங்கத்தின் உதவியுடன் விசாரித்தபோது, அதிகாரிகள் எனக்கூறி வந்தவர்கள் மோசடி நபர்கள் என தெரியவந்தது.


இதற்கிடையே, அந்த நபர்கள் சிறிது நேரத்தில் திரும்பி வருவதாகவும், பணத்தை தயார் செய்து வைத்திருங்கள் என கூறிவிட்டு லாவகமாக சென்றுள்ளனர். இதுதொடர்பாக, முத்துராமன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் அந்த 4 பேரின் செயல்கள் பதிவாகியுள்ளது.


சென்னை பதிவெண் கொண்ட காரில் வந்த நால்வரும், அருகிலுள்ள சில கடைகளுக்கும் சென்று இதுபோன்று நடந்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது. அதிகாரி எனக்கூறி கடைக்கு ஆய்வுக்கு வருபவர்களிடம், முதலில் அடையாள அட்டை காண்பிக்க சொல்லி, உறுதி செய்துக்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.