அவசரநிலை காலத்தை நினைவுபடுத்திய பிரதமர் மோடிக்கு இப்போது ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’ நிலவுகிறது என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
வானொலியில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியின் போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக பேசினார். கடந்த 1975-ம் ஆண்டு இதே நாளில்தான் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள். 1975 ஜூன் 25 ஜனநாயகத்தின் மிகவும் இருண்ட நாளாகும். ஒட்டுமொத்த தேசமும் சிறையாகியது. நீதித்துறையும் முடக்கப்பட்டது. ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களை நாம் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது, நேர்மறையான நோக்கத்தை நோக்கி நாம் முன்செல்ல வேண்டும். அடல் பிகாரி வாஜ்பாய் ஜி கூட சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் மீதான நம்முடைய அன்பானது ஒரு விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும் என பேசினார்.