ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது. இந்த ரத யாத்திரை தமிழகம் வருவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவில் இருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்ட எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு ராமராஜ்ய ரத யாத்திரை வந்தடைந்துள்ளது. ரத யாத்திரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தக் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ ரதயாத்திரையால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ரத யாத்திரை ராமன் கோயில் கட்ட என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ரத யாத்திரையை அனுமதித்தது ஏன்? மதசார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மை தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?” என கடுமையான பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ ரத யாத்திரை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மதுரை ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி செல்கிறது. 5 மாநிலங்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரத யாத்திரை சென்றுள்ளது. இந்த யாத்திரையால் எந்தப் பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கியுள்ளது. அனைத்து மதத்திற்கும் சம உரிமை உண்டு. தமிழகத்தில் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்” என்றார்.