சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால், யார் முதலைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஆண்டு இதே மாதம் மேலோங்கி நின்ற தருணம் இன்றும் அனைவரது மனதில் நிழலாடுகிறது. யாருமே எதிர்பாராத வகையில் முதலமைச்சராக தேர்வான எடப்பாடி பழனிசாமியின் அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது.
வி.கே.சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்திய பின்னர், எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக வருவார் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலா முதலமைச்சராக முடியாததால், கே.ஏ.செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களில் ஒருவர்தான் ஆட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவார் என பலரும் எண்ணியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அப்பதவிக்கு தேர்வானார். அன்று முதல் இன்று வரை கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி பழனிசாமி தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் பேசப்படுகிறது. கட்சி வட்டாரத்தில், சரியான முறையில் எதிர்வினையாற்றுபவர் என்றும், ஆட்சி நிர்வாகத்தில் நடைமுறையை நன்கு அறிந்தவர் என்றும் பேசப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்துவரும் கடந்த ஓராண்டில் பொதுவிநியோகத் துறையிலோ அல்லது மின் விநியோகத்திலோ பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை என்றும் பேசப்படுகிறது. பிரச்னைகளுக்காக வன்முறையோ அல்லது கலவரங்களோ ஏற்படாத வகையில் அவர் பார்த்துக் கொண்டார் என்பதும் கருத்தாகும்.
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துக்கொண்டு தமிழகத்தின் சில தேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுப் பெற்று வருவதாகக் கூறுகின்றனர் அதிமுகவினர். மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே மத்திய அரசுடன் சுமுக உறவை கடைப்பிடிப்பதாகவும், மாநிலத்தின் உரிமைகளை முதலமைச்சர் விட்டுக் கொடுக்கவில்லை என்பதும் அதிகமுக நிர்வாகிகளின் கருத்தாகும்.