சசிகலாவை சின்னம்மா என்று கூறியும், டிடிவி தினகரன் யார்? எனக்கேட்டும் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினரின் இடங்களை தொடர்ந்து ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
வருமான வரி சோதனைக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார். அத்துடன் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த சோதனை மன வேதனை அளிப்பதாக கூறினார்.
அப்போது சசிகலாவை சின்னம்மா என்றும் குறிப்பிட்ட அவர், வருமான வரி சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் இருப்பதாக தினகரன் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, டிடிவி தினகரன் யார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்படவில்லை என்றும், சின்னம்மாவின் குடும்பத்தினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையானது, யாரால் நடத்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் சொன்னார்.