டிரெண்டிங்

அதிமுக தலைமையில் தான் கூட்டணி : முதல்வர் பழனிசாமி உறுதி

அதிமுக தலைமையில் தான் கூட்டணி : முதல்வர் பழனிசாமி உறுதி

webteam

தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ள சூழலில் கூட்டணி குறித்த திரைமறைவு பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகளிடையே தொடங்கியுள்ளன. தற்போது அ.தி.மு.க. தலைமையில் பாரதிய ஜனதா, பா.ம.க., தேமுதிக, த.மா.க. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும், பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

அதேபோல், தமிழக பாஜக தலைவர்கள் சிலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால், பாஜக, அதிமுக இடையே முரண்பாடு இருப்பதாக பேசப்பட்டது. இதனையடுத்து, இன்று திருவாரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணிக்கு தலைமை யார் என்பது முடிவு செய்யப்படும் என்றார். முதல்வர் பிடி கொடுக்காமல் பேசியதாக இது பார்க்கப்பட்டது.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதலே தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் அவர் கூறினார்.