டிரெண்டிங்

“எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்த காட்டுமிராண்டிகள்” : முதலமைச்சர் பழனிசாமி கண்டனம்

“எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்த காட்டுமிராண்டிகள்” : முதலமைச்சர் பழனிசாமி கண்டனம்

webteam

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்திய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. இந்த சிலை மீது நேற்று மர்ம நபர்கள் காவித்துண்டு ஒன்றை போர்த்திவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் எம்.ஜி.ஆர் சிலை உள்ள இடத்திற்கு வந்தஎம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட அதிமுகவினர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி, மதங்கள் கடந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபமாலமாக இதுபோன்று சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரமென்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயல் என்று தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியிருக்கும் விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து, அவர்களை பின்னால் இருந்து இயக்கும் சமூக விரோதிகளை இனம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்பும் தோலுரித்து காட்டிட, விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதுச்சேரி முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.