டிரெண்டிங்

உரிமைக்குரல் எழுப்புங்கள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

webteam

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்ப வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் எம்பிக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் கடந்த முறை காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுவினரின் செயல்பாடுகளால் நாடே நம்மை திரும்பிப்பார்த்தது என்று தெரிவித்தார். அதே போல வரும் நாட்களிலும் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். 

காவிரி விவகாரத்தில் எல்லாத்தரப்பும் ஒத்துழைப்பு வழங்கியதால் தமிழகத்திற்கு வெற்றி கிடைத்தது என்றும்‌ இவ்‌விவகாரத்தில் தேவையான நீதியை பெறுவதில் அதிமுக எம்பிக்களின் பங்கு மிகச்சிறப்பாக இருந்ததாகவும் முதல்வர் பாராட்டினார். மேகதாதுவைப் போல, கஜா புயல் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்துக்கு அதிக நிதி தர மத்திய அரசை வலியுறுத்த வே‌ண்டும் என எம்பிக்களை கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கஜா புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.