டிரெண்டிங்

டிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் ? யாருக்கு லாபம் ?

டிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் ? யாருக்கு லாபம் ?

Rasus

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலில் குறிப்பாக ஆளுங்கட்சியில் அடுத்தடுத்து அதிரடியாக ஏகப்பட்ட குழப்பங்கள், மாற்றங்கள் நடந்தன. அந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு தெரிய வந்தவர்தான் டிடிவி தினகரன். அரசியலுக்கு அவர் புதியவர் இல்லையென்றாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அவர் வெற்றி பெற்றபோது தான், அவர் மீது பலரின் கண்களும் விழ ஆரம்பித்தன. ஆளுங்கட்சியாக அதிமுக இருக்க, எதிர்க்கட்சி இடத்தில் திமுக இருந்தபோதும் குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அவர் ஆர்.கே.நகர் தொகுதியை கைப்பற்றினார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் அவருக்கு கிடைத்த வெற்றி அவரை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். டிடிவியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிக்கும் சற்று போட்டி கொடுக்கும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவை கைப்பற்றிவிடுவோம் என டிடிவி தினகரன் உறுதியாக சொல்லி வருகிறார். அதனடிப்படையில் டிடிவி தினகரனுக்கும், அதிமுகவிற்கும் தொடர்ச்சியான கருத்து மோதல் இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் இருந்துதான் டிடிவி தினகரனுக்கும், திமுகவிற்கும் மோதல் அதிகரித்துள்ளது.

டிடிவியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த செந்தில் பாலாஜி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இது டிடிவிக்கு சற்று பாதகமாகவே பார்க்கப்பட்டது. அப்போதில் இருந்தே டிடிவி - ஸ்டாலின் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இதனிடையே திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்தும் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பேசியிருந்த டிடிவி தினகரன், “ இடைத்தேர்தல் குறித்து ஆளுங்கட்சி ஏன் பயப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் எதிர்க்கட்சி ஏன் பயப்படுகிறது..? ஆர்.கே.நகரில் டெபாசிட்டை இழந்துவிட்டோம். இங்கேயும் இழந்துவிடுமோ என்ற அச்சம் திமுகவிற்கு இருக்கிறதோ..? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆர்.கே.நகரில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின் டிடிவி தினகரன் 20 ரூபாய் டோக்கன் தினகரன் என அழைக்கப்படுவதாக கூறியிருந்தார். அதற்கு எதிர்வினை ஆற்றிருந்த டிடிவி தினகரன், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை மக்கள் டெபாசிட் இழந்த ஸ்டாலின் என அழைப்பதாக சாடியிருந்தார்.

இப்படி இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வந்தது. இதனிடையே தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற போராட்டத்தில் டிடிவி தினகரன் ஸ்டாலினை போன்று மிமிக்ரி செய்து பேசினார். அத்துடன் அரசியல் ரீதியான கருத்து மோதல்களுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை தாக்குகின்றனர். நான் ஒன்றும் அதனை பொறுமையாக கேட்டுக்கொண்டே இருப்பவன் அல்ல. மீண்டும் சிரித்தபடியே பதிலடி கொடுப்பேன் என்றார்.

இதனிடையே ஆளுங்கட்சியின் தவறுகள் சுட்டிகாட்டுவதை தவிர்த்து மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. “நாங்கள் ஆளுங்கட்சியின் தவறுகளை தான் சுட்டிக்காட்டி பேசுகிறோம். ஒருபோதும் மற்றவர்களை பற்றி பேசுவதில்லை. ஆனால் மற்றவர்கள் தாக்கி பேசும்போதும் தலைவர் புண்பட்டு விடுகிறார்”என திமுகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். டிடிவி தினகரன் பேசும் பொதுக்கூட்டங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறபோகிறார்கள் என்பது தேர்தலுக்கு பின்புதான் தெரியவரும்.