சென்னையில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கராத்தே தியாகராஜனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மேடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுததைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டன. அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொள்வதற்கு முன்னதாக, தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பேசினார்.
அப்போது, “திமுக நடத்தும் கூட்டங்களில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால், காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு திமுகவின் மாவட்ட செயலாளர், தொகுதி எம்எல்ஏ போன்றார் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது” என்று கராத்தே தியாகராஜன் பேசினார்.
காரத்தே தியாகராஜனின் இந்தப் பேச்சு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு திரண்டிருந்த திமுகவினர் மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு முன்னேறினர். மேலும் கராத்தே தியாகராஜன் தொடர்ந்து பேசக்கூடாது எனவும் திமுகவினர் முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் திமுக- காங்கிரஸ் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மேடையில் இருந்த மற்ற தலைவர்கள் சுதாரித்து கராத்தே தியாகராஜன் பேச்சை முடித்துக்கொள்ளச் செய்தனர்.