vikram vikram latest monkey issue
டிரெண்டிங்

வசமாக சிக்கிய சீயான் விக்ரம்! ஒரே வீடியோவில் நாசமான புகழ்! கள்ளக் கடத்தல் செய்தாரா?

நடிகர் விக்ரமின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

சீயான் விக்ரம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட குரங்கு வீடியோ வைரலாகி, அவர் மீது வனவிலங்கு சட்டம் மீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ‘லார் கிப்பன்’ இனத்தைச் சேர்ந்த குரங்கை மணிப்பூர், ஈரோடு வழியாக சென்னைக்கு கள்ளக் கடத்தல் மூலம் கொண்டு வந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

திரையுலகில் ஆரம்பம் முதலே, எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என்ற டிரெண்ட் உள்ளது. இதில், ஒருவரை பிடிக்கும் என்றால், மற்றொருவரை ரசிகர்களுக்கு பிடிக்காது. இப்படி தான் இரு அணிகளாக மொத்த திரையுலகமே இருந்து வருகிறது.

ஆனால், ஒரு சில ஹீரோக்களை மட்டும் தான், ஒட்டுமொத்த ரசிகர்களும் விரும்புவார்கள். சிறு துளி வெறுப்பை கூட, அவர்கள் மீது பதிவு செய்ய மாட்டார்கள். அப்படியான நடிகர்களில் ஒருவர் தான் சீயான் விக்ரம். பெரும்பாலும் திரையுலகிலும் நல்ல மரியாதையை பெற்று வைத்திருக்கும் விக்ரம், தற்போது ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

vikram

அதாவது, நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், அவரது வளர்ப்பு பிராணி என்று கூறப்படும் குரங்குடன் அவர் காட்சி அளித்திருந்தார். வீடியோவும் வைரலானது... அவர் மீது தற்போது பரவி விடப்படும் சர்ச்சையும் கூடவே சேர்ந்து வைரலானது...

இந்த வீடியோவில் உள்ள குரங்கு இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் காணப்படும் ‘லார் கிப்பன்’ வகையைச் சேர்ந்தது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் இத்தகைய வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் வளர்ப்பது சட்டவிரோதம்.

vikram

குறிப்பாக, இந்தக் குரங்கு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் இருந்து மணிப்பூர், ஈரோடு வழியாக சென்னைக்கு கடத்தி வரப்படுகிறது என்று அந்த குரங்கின் ஜாதகத்தை புட்டு புட்டு வைத்த சமூக செயற்பாட்டாளர்கள், இது எப்படி நடிகர் விக்ரமுக்கு கிடைத்தது என்று கேள்வி எழுப்பினார்கள். அப்படியானால், விக்ரம் இதை கடத்தினாரா என்று, பகீர் சந்தேகத்தையும் எழுப்பினார்கள்.

இதற்கிடையே, நடிகர் விக்ரம் தனது சம்பந்தியான தொழிலதிபர் சி.கே.ரங்கநாதன் உதவியுடன், இந்த குரங்கை சட்டவிரோதமாக வளர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டை எழுப்பினார்கள். இவ்வாறு நாலா புறமும் பெரும் எதிர்ப்புகளும், குற்றச்சாட்டுகளும், கேள்விகளும் சூழ்ந்ததால், நேற்று அந்த வீடியோவை சீயான் தனது சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டார்.

vikram

எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என்பது போல், வீடியோவை நீக்கிய பிறகு தான், இதுதொடர்பான சர்ச்சைகளும், விமர்சனங்களும், சந்தேகங்களும் இன்னும் அதிகரித்தது. இப்படியான சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், குரங்கு எவ்வாறு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது, அதன் உண்மையான இனம் இதுதானா? குரங்கை வளர்ப்பதற்கான முறையான ஆவணங்கள் உள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில், விசாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நெட்டிசன்கள் பாயாசம் கிடைத்தாலே பாய்சன் மாதிரி சாப்பிடுவார்கள். இப்போது பாயாசமே கிடைத்துவிட்டது. சும்மா இருப்பார்களா? என்று தோன்ற வைக்கிறது, நடிகர் விக்ரமின் இந்த புதிய சர்ச்சை...