டிரெண்டிங்

கணக்கு சொல்லிக்கொடுத்ததால் கடுப்பு; விரக்தியில் தேம்பி அழுத சிறுவன்: வைரல் வீடியோ பின்னணி

JananiGovindhan

கணக்கு பாடம் என்றாலே வேப்பங்காயாக கசக்காத நபர்களே இருக்காது. ஆனால், கணக்கு பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கு நல்ல ஆசிரியர் எப்படி தேவையோ அதேபோல அதை புரிந்துகொள்ள நல்ல மாணாக்கரும் தேவையே. ஆனால் என்னதான் விழுந்து விழுந்து நன்றாகவே சொல்லிக்கொடுத்தாலும் அது அந்த மாணவருக்கு புரியாமலோ தெரியாமலோ இருந்தால் அதனால் ஆசிரியருக்கோ சொல்லிக் கொடுப்பவருக்கோ ஒரு கட்டத்தில் வெறுப்பு ஏற்படுவது இயற்கையானதாகவே இருக்கும்.

அந்த வகையில் சீனாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது சகோதரிக்கு கணிதம் சொல்லிக் கொடுக்கப்போய் வெறுத்துப் போனதே மிச்சம் என்ற நிலையில் அழுது தீர்த்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், தனது சகோதரிக்கு பல முறை சரியாக கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தும் அந்த சிறுமி அதை புரிந்துக்கொள்ளாமல் தவறான பதிலே சொல்லி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த அந்த சிறுவன் வெறுத்துப்போய் அழத் தொடங்கியிருக்கிறான். அப்போது இந்த நிகழ்வை அவர்களை தாய் வீடியோவாக எடுக்கும் போது இப்படியெல்லாம் அழுதால் நீ ஆசிரியராக முடியாது எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த சிறுவன், “ஏற்கெனவே நான் சரியான பதிலை கூறிவிட்டேன். அதில் 3 கோணங்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டுதான் இருப்பதாக அவள் அடித்துக் கூறுகிறாள்.” என அழுதுக் கொண்டே கூறியிருக்கிறான். அப்போது அந்த சிறுவனின் சகோதரியும் அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

இந்த நிகழ்வை சிரித்துக்கொண்டே வீடியோ எடுத்த அவர்களின் தாய், அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருக்கிறார். தற்போது அது must share news என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு 10 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதோடு பலரும் இதேப்போன்று தங்களுக்கு கணக்கு பாடத்தால் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.