டிரெண்டிங்

‘கொரோனா டூட்டி வேண்டாம்; ரிசைன் பண்ணுமா' – பெண் மருத்துவரின் நெகிழ்ச்சி பகிர்வு

‘கொரோனா டூட்டி வேண்டாம்; ரிசைன் பண்ணுமா' – பெண் மருத்துவரின் நெகிழ்ச்சி பகிர்வு

JustinDurai

‘கொரோனா டூட்டி வேண்டாம்; ரிசைன் பண்ணிட்டு வாம்மா’ என்று உறவினர்கள் தன்னிடம் கெஞ்சிக் கேட்டதாக கூறுகிறார், கொரோனா மருத்துவப் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஆட்சியரின் விருது பெற்ற அனுரத்னா.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரான அனு ரத்னா, கொரோனா மருத்துவப் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரின் விருது பெற்றுள்ளார்,

விருது பெற்றது குறித்து அனுரத்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

‘’அன்று விடுப்பு முடிந்து அடுத்தநாள் மீண்டும் பணியில் இணைய சென்னை கிளம்புகிறேன். நாளை பணிக்கு செல்ல வேண்டும் என்றதும் உறவினர்கள் மத்தியில் ஒரு வருத்தம் தென்பட்டது. அனைவருமே எனக்கு நிறைய அறிவுரைகளை கூறினர்.

அம்மா மட்டும் நான் பணிக்கு போகவே கூடாது என்றார். ‘’வேலையே உனக்கு வேணாம், உங்க வீட்டுக்காரர் பார்க்குற வாத்தியார் வேலை போதும். நீ ஆஸ்பத்திரி வேலைக்கு போகவே வேணாம்மா’’ என்று பிடிவாதமாய் சொன்னார்.

‘’அப்படி உயிரை போக்கும் பணியோ அந்த பணமோ உனக்கு வேண்டாம்’’ என்று கெஞ்சினார். அவரை சமாதானம் செய்ய, ‘’சரிம்மா நான் சென்னை போகல. வேலைக்கு போகல, வேலையே ராஜினாமா செய்கிறேன் என்றேன். அதன்பின் தான் அமைதி ஆனார்.

எவ்வளவு கொடுமையான சூழல் சமூகத்தில் இருக்கு? குடும்பத்தினரிடம் எவ்வளவு உயிர் பயம் இருக்கு? இப்படி சாமானியர்களை ஆட்கொண்டுவிட்டதே இந்த கொரோனா? அம்மாவை சமாதானப்படுத்த வேண்டி மட்டும் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்றேன்.

ஆனால் வேலையை விடமாட்டேன். மருத்துவப் பணியை நான் பொருள் ஈட்டும் பணியாக நான் ஒருபோதும் கருதியதில்லை. நேசித்து செய்கிறேன். சாமானியர்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க உழைக்க வேண்டும். அடித்தட்டு மக்களிடம் உடல்குறித்தும், சிறுசிறு நோய் குறித்தும் புரியவைக்க வேண்டும் என்பதற்காகதான், அரசுப்பணி போக மீதம் இருக்கும் நேரங்களிலும் அடித்தட்டு மக்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்த கொரோனாவிற்கு பயந்து நான் வேலையை துறக்க முடியாது.

அரசுப்பணியில் இருக்கிறாய். உன்னால் ஓரளவிற்குமேல் இதில் சமூகப் பணிகளில் ஈடுபட முடியாது என்றார்கள் சில நண்பர்கள். அரசு நில் என்றால் நீ நிற்கனும்; அரசு உட்காரு என்றால் நீ உட்காரனும்; இதில் இருந்துகொண்டு எப்படி மக்கள் பணி செய்வாய் என்பார்கள்.

அரசுப்பணியில் இருப்பதால் தான் நிறைய மக்கள் பணிகளை என்னால் செய்யமுடிகிறது. அதிகாரம் கையில் இருக்கும்போது தான் நிறைய உதவ முடிகிறது. ஆகையால் எனக்கு என் பணி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அரசுப்பணியில் இருந்துகொண்டே என் சமூகப்பணியும் தொடரும்.

வெள்ளம், புயல், டெங்குவை தொடர்ந்து கொரோனாவிற்காகவும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றேன். தமிழக அரசின் மாநில அளவிலான விருதுகளையும் இதற்கு முன் பெற்று இருக்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் பல விருதுகளையும் பெற்று இருக்கிறேன். தனியார் நிறுவனங்கள் தரும் விருதுகளையும் பெற்று இருக்கிறேன். விருதுகள் ஒரு அங்கீகாரம். அவ்வளவே. அது ஒரு வினை ஊக்கி.

எவ்வளவு விருதுகள் பெற்றாலும் தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாமல் என்றும் மக்கள் பணி செய்வேன். மக்களுக்காக தான் நான். விருதுகளுக்காக அல்ல.

கொரோனா நோயில் இன்னுயிர் நீத்தோருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். புற்றுநோயில் மரணத்தை தழுவிய என்னை பெற்ற என் அம்மா மங்கையற்கரசிக்கும்,கொரோனாவில் மரணத்தை தழுவிய என் இன்னொரு தாயாக இருந்த பானுமதி அக்காவிற்கும் இதை சமர்ப்பிக்கிறேன். இந்த இரு தாய்களின் ஆசியுடன் என் பயணம் தொடரும்’’.

 இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.