பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பூந்தமல்லியில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த சதீஷ் என்பவரும், கடலூர் மாவட்டத்தில் முதுநிலை தீயணைப்பாளராக பணிபுரிந்து வந்த நடராஜன் என்பவரும், திண்டுக்கல் தீத்தடுப்புக் குழு நிலைய அலுவலர் சுந்தரமூர்த்தி என்பவரும் அன்னூரில் தீ அணைப்பாளர் ஒட்டியாக பணிபுரிந்து வந்த வி.ஆர். செல்வராஜ் என்பவரும் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் யந்திர கம்பியர் ஒட்டியாகப் பணிபுரிந்து வந்த திருமலைராஜ் என்பவரும் பல்வேறு காலங்களில் உடல் நலக்குறைவால் காலமாகினர்.
இந்தச் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.