டிரெண்டிங்

“இதையே சொல்லி சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள்” - முதல்வர் ஆவேசம்

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையின மக்களுக்கும் பாதிப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள்‌ அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசினார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆவேசமாக பதிலளித்தார். “இதையே சொல்லி சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள். சிஏஏவால் தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சொல்லுங்கள். நாங்கள் தீர்வு காண்கிறோம். தமிழ் நாட்டில் வாழ்கின்ற, தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம்.

அதைவிட்டுவிட்டு மக்களை ஏமாற்றி, நாடகமாடி தவறான, அவதூறான செய்தியை சொல்லி, இன்றைக்கு அமைதியாக வாழ்கின்ற மாநிலத்தில் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படாதீர்கள். யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விளக்கம் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதே அதிமுகவின் நிலைப்பாடு என மாஃபா பாண்டியராஜன் பேசியதற்கு உரிமை மீறல் பிரச்னையை கொண்டுவந்தார் திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு. குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது எனவும் மாநில அரசிடம் இல்லை எனவும் வலியுறுத்தினார். ஆனால் உரிமை மீறல் பிரச்னை ஏதும் இல்லை எனவும், மாஃபா பேசியது சரிதான் எனவும் சபாநாயகர் தீர்ப்பு வழங்கினார். இதனால் திமுக வெளிநடப்பு செய்தது.

இது தொடர்பாக பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் சொல்வதைத்தான் நாங்களும் சொல்கிறோம். குடியுரிமை வழங்கும் அதிகாரம் மத்திய‌ அரசிடம்தான் உள்ளது எனவும் மாநில அரசிடம் இல்லை எனவும் ஆவேசமாக கூறினார்.